லாக்கப் – நாவல் விமர்சனம்
இந்தப் புத்தகத்தைப் பற்றி விமர்சனம் எழுதும் பொழுது இதையே மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்தை புறந்தள்ளுவது சிரமமே. இருந்தாலும் லாக்கப் நாவலும் விசாரணை திரைப்படமும் கையாண்ட விஷயங்கள் வேறு வேறு. இது லாக்கப் நாவல் பற்றிய விமர்சனம் ஆகையால் அதைப்பற்றி மட்டும் இங்கு எழுதுகிறேன்.
எழுத்தாளர்: மு. சந்திரகுமார்
பக்கங்கள்: 144
நாம் நமது அன்றாட வாழ்வில் நிறைய போலீஸ்காரர்களை சந்தித்திருப்போம் அல்லது கடந்து வந்திருப்போம். நீங்கள் சரியாக கவனித்தீர்களேயானால் போலீஸ்காரர்களின் நடத்தை ஒரு சாமானியனுக்கும் ஒரு பணக்காரனுக்கும் இடையில் வேறுபடும். எடுத்துக்காட்டாக சொல்கிறேன் போலீஸ்காரர்கள் லாரி ஓட்டுனரை நடத்துவதும் ஒரு காருக்கு சொந்தக்காரரை நடத்துவதும் வித்தியாசப்படும். இப்புத்தகம் இதைத்தான் வலிமையாக பேசுகிறது. சாமானியர்கள் இவர்கள் கையில் கிடைத்தால் எப்படியெல்லாம் இரக்கமின்றி அவர்களை நடத்துவார்கள் என்பதே இப்புத்தகத்தின் அடிநாதம்.
நல்லவர்கள் அல்லாதவர், மக்கள் பண்பை இழந்து போனவர்கள், மனிதனை மனிதனாய் மதிக்கத் தெரியாதவர்கள் ஒருக்காலும் மனித குலத்தை அல்ல, ஒரு சில மனிதர்களை கூட திருத்த முடியாது காப்பாற்றவும் முடியாது.
குமாரும் அவனுடைய நண்பர்களும் தன் சொந்த ஊரை விட்டு குண்டூருக்கு வருகிறார்கள் காரணங்கள் சொல்லப்படவில்லை. இவர்கள் அன்றாடம் காட்சிகள் சிறு சிறு வேலைகள் செய்து வாழ்க்கை நடத்துகிறார்கள். ஒரு நாள் இந்த நண்பர்களில் ஒருவன் இரவு காட்சி சினிமா பார்த்துவிட்டு வரும்பொழுது போலீஸ்காரர்களிடம் மாட்டுகிறான். அப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் ஏதேதோ உளறுகிறான் அப்படி உளறும் பொழுது அவனுடைய மற்ற நண்பர்களையும் தேவையில்லாமல் கோர்த்துவிடுகிறான். போலீஸ் அவர்களை கொண்டு வந்து சிறையில் அடைக்கிறது. இந்த புத்தகம் முழுவதும் அவர்கள் எப்படி எல்லாம் சித்திரவதை அனுபவித்தார்கள், போலீஸ்காரர்கள் தங்களுடைய அதிகாரத்தை எப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்கிறார்கள், ஒரு சாமானியன் கிடைத்தால் எப்படி எல்லாம் அவன் மீது தங்களுடைய எதேச்சதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றியது. கடைசியில் அவர்கள் தப்பித்தார்களா அல்லது நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப் பட்டார்கள் என்பதை நீங்கள் புத்தகம் படித்து தெரிந்து கொள்ளவும்.
இம்மாதிரியான நாவல்களை நான் இதுவரை படித்ததில்லை. முதல் முறை சில விஷயங்களை எழுத்தின் மூலமாக தெரிந்து கொள்ளும் பொழுது மிகவும் மனது சஞ்சலப்படுகிறது. நான் போலீஸ்காரர்கள் எப்படியெல்லாம் ஒருவரை நடத்துவார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஏன் ஒரு சில முறை அவர்களுடைய அதிகார பலத்தை பயன்படுத்தி என்னை மிரட்டியும் இருக்கிறார்கள் ஆனால் இந்தப் புத்தகத்தை படிக்கும் பொழுது தான் அவர்களுடைய உண்மை முகம் வெளிப்படுகிறது.
என்னதான் நாவலின் எழுத்தாளர் பட்ட கஷ்டங்களை இப்புத்தகத்தில் எழுதி இருந்தாலும் என்னால் ஒரு சில விஷயங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால்தானோ என்னமோ அந்த நம்பகத்தன்மை எனக்கு வரவில்லை. இருந்தாலும் அவன் பட்ட கஷ்டம் அவனுக்கு தான் தெரியும். இன்னொரு முக்கியமான விஷயம் எனக்கு இந்நாவலில் பிடிக்கவில்லை என்றால் எழுத்து நடை. தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் எழுத்துநடை ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு மாதிரி மாறுகிறது. ஒரு சில இடத்தில் எழுத்துத் தமிழிலும் ஒரு சில இடத்தில் பேசும் தமிழிலும் எழுதப்பட்டு இருந்தமையால் படிக்கும் பொழுது சில தடுமாற்றங்கள் ஏற்பட்டது.
எனினும் இப்புத்தகம் காவல்துறையினரின் மனநிலைகளும் ஒரு சாமானியனை இவர்கள் எப்படியெல்லாம் நடத்துவார்கள் என்பதை தெரிந்துகொள்ள ஒரு திறவுகோலாக பார்க்கிறேன்.
நீங்கள் இப்புத்தகத்தைப் படித்து இருக்கிறீர்களா? அப்படி படித்திருந்தால் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் படிக்க ஆவலாக இருக்கிறேன்.